இடைத்தேர்தலில் வென்ற பிறகு தந்திரமாக மின்கட்டணத்தை திமுக அரசு உயர்த்தி இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்கட்டணத்தை உயர்த்துவது வன்மையான கண்டனத்துக்குரியது எனக் கூறியுள்ளார்.ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலையில் தாங்க முடியாத சுமையை திமுக அரசு ஏற்றியுள்ளதாகவும்,கிராமப்புற குடிசை வீடுகளுக்கும், வேளாண்மைக்கும், விதை பண்ணைக்கும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏன் என்றும்? இதுதான் திராவிட மாடலா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்றத்தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வென்ற பிறகு தந்திரமாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக விமர்சித்துள்ள அவர்,மின்கட்டண உயர்வை திரும்பப்பெற்று, மாதாந்திரம் மிகட்டணம் செலுத்தும் நடைமுறையை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.