வீடு கட்டுவதற்கான அனுமதிக் கட்டணத்தை தமிழக அரசு இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தி இருப்பதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை, எளிய, சாமானிய, நடுத்தர மக்கள் சொந்த வீடு கட்டுவதும், புதிய வீடு வாங்குகின்ற கனவும் இதன் மூலம் கேள்விக்குறியாகியிருப்பதாக கூறியுள்ளார். திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு இது சான்றாக அமைந்துள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சொத்துவரி உயர்வு, பத்திர பதிவு கட்டண உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு,
நிலங்களின் வழிகாட்டு மதிப்பு உயர்வு, மின் கட்டண உயர்வு என பல்வேறு வழிகளில் மக்களை கசக்கி பிழிந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். ஜெயலலிதா ஆட்சியில் இதை விட குறைவான மாநில வருவாயை கொண்டு, அனைத்தையும் சமாளித்ததோடு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தியதாக கூறியுள்ளார். வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டணத்தை திமுக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.