PhD படிப்புகளின் தரம்... அதிருப்தி தெரிவித்த அமைச்சர் பொன்முடி
பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பிஎச்டி படிப்புகளின் தரம் குறைவாக இருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் துணைவேந்தர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களில், 9 துணைவேந்தர்கள், 4 பல்கலைக்கழகங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது,
பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி பற்றாக்குறை குறித்து துணைவேந்தர்கள், அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் மற்றும் தணிக்கை தொடர்பான விபரங்களையும் உயர்கல்வித்துறை அமைச்சரிடம் வழங்கினர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை அமல்படுத்துவது, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான கால அட்டவணைகளை பயன்படுத்துவது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என பொன்முடி அறிவுறுத்தினார். மேலும் டாக்டரேட் படிப்புகளுக்கான தரம் குறைவாக இருப்பதாகவும் அமைச்சர் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.