சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று எம்.ஆர்.ஐ. உட்பட பல ஸ்கேன் பரிசோதனைகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைதான பிறகு, உடல்நலக்குறைவு ஏற்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டு, நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் செந்தில் பாலாஜிக்கு புதன்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், காவல் துறை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எக்கோ, எக்ஸ்ரே மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். மருத்துவமனையில் அவருக்கு கழுத்துவலி, முதுகு வலி மற்றும் இருதயவியல் தொடர்பான ஸ்கேன்கள் வெள்ளிக்கிழமை எடுக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அவர் வியாழக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை.