தமிழகத்தின் ஸ்டார் தொகுதி... ஒட்டு மொத்த குறியும் ஒரே புள்ளியில் - மல்லுக்கு தயாராகும் கட்சிகள்...
தமிழகத்தின் ஸ்டார் தொகுதி...
ஒட்டு மொத்த குறியும் ஒரே புள்ளியில்
அனல் வீசும் களம்... மல்லுக்கு தயாராகும் கட்சிகள்...
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் 3வது தொகுதியான தென் சென்னை மக்களவை தொகுதியின் கடந்த கால தேர்தல் முடிவுகளை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு..
சென்னையின் 3 தொகுதிகளில் ஒன்றான தென் சென்னை பகுதி, அதிக வாக்காளர்களை கொண்ட பகுதியாக கருதப்படுகிறது.
விருகம்பாக்கம், தியாகராய நகர், சைதாப்பேட்டை, மைலாப்பூர், வேளச்சேரி, மற்றும் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது..
குறிப்பாக அதிக அளவில் ஐடி பார்க்குகளை உள்ளடக்கிய வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளையும், தமிழ்நாட்டின் வணிக ரீதியான இடங்களான தியாகராய நகர், கோயம்பேடு மார்கெட் போன்ற இடங்களையும் உள்ளடக்கியுள்ளதால் பெரும் கவனம் பெரும் தொகுதியாக உள்ளது..
1967ல் அறிஞர் அண்ணாவை மக்களவை எம்.பி.யாக்கி அழகு பார்த்த தென் சென்னை தொகுதி, இதுவரை இடைத்தேர்தல் உட்பட 17 முறை தேர்தலை எதிர்கொண்டுள்ளது.
தற்போது மக்களவை தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் தென் சென்னை தொகுதி, கடந்த தேர்தல்களை எப்படி கடந்து வந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.
2004ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, பாமக, உட்பட, 8 கட்சிகள் அடங்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், அதிமுக பாஜகவுடனான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதின.
இதில் அப்போது சிட்டிங் எம்.பி.யாக இருந்த திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலு 5 லட்சத்து 64 ஆயிரத்து 578 வாக்குகளுடன் தென் சென்னை தொகுதியில் வெற்றி கண்டார். அதிமுக சார்பில் போட்டியிட்ட பதர் சயீத் 3 லட்சத்து 43 ஆயிரத்து 838 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.
இதன் பின் 2009ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது, கூட்டணிகள் மாற்றம் கண்டன. மதிமுக, பாமக, இந்திய மார்க்சிஸ்ட் கூட்டணி கட்சிகளை உள்ளடக்கிய அதிமுக தலைமையிலான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் சி. ராஜேந்திரன் 3 லட்சத்து 8 ஆயிரத்து 567 வாக்குகளுடன் 42.38 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிகண்டார்.
காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய
திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஆர்.எஸ். பாரதி 2 லட்சத்து 75 ஆயிரத்து 632 வாக்குகளை பெற்று 32 ஆயிரத்து 935 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
பிற கட்சிகளான, தேமுதிக வேட்பாளர் 67 ஆயிரத்து 291 வாக்குகளும், பாஜக வேட்பாளரான இல. கணேசன் 42 ஆயிரத்து 925 வாக்குகளையும் பெற்று தேர்தல் ரேசில் இருந்தனர்.
2014 பொதுத்தேர்தலில் கூட்டணியின்றி தனித்து நின்ற அதிமுக வேட்பாளர் ஜெ. ஜெயவர்தன் 4 லட்சத்து 34 ஆயிரத்து 540 வாக்குகளை பெற்று வெற்றி கண்டார்.
காங்கிரசிடம் இருந்து விலகி, கூட்டணி அமைத்திருந்த திமுக வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் 2 லட்சத்து 98 ஆயிரத்து 965 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவிய நிலையில், தேமுதிகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக வேட்பாளர் இல கணேசன் 2 லட்சத்து 58 ஆயிரத்து 262 வாக்குகளை பெற்றிருந்தார்.
2019ம் ஆண்டு காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியன், 5 லட்சத்து 64 ஆயிரத்து 872 வாக்குகளுடன் 50.28 சதவீத வாக்குகள் பெற்று பிரமாண்ட வெற்றிக்கண்டார்.
பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், 3 லட்சத்து 2 ஆயிரத்து 649 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.
இப்படி முக்கிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் தென் சென்னை தொகுதியில்..இம்முறையும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.