மருத்துவர்களின் தொடர் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர, பேச்சுவார்த்தைக்கு வருமாறு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார். பேச்சுவார்த்தைக்கு வருவதாக அறிவித்திருந்த மருத்துவர்கள், பின்னர் வராததால், 2 மணி நேரம் காத்திருந்த மம்தா பானர்ஜி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில், சுகாதாரத் துறை தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போராடிவரும் மருத்துவர்களை, மம்தா பானர்ஜி நேரில் சந்தித்தார். மருத்துவர்களின் தொடர் போராட்டம் காரணமாக பல நாட்கள் உறக்கம் இல்லாத இரவுகளை கழித்ததாக தெரிவித்த மம்தா பானர்ஜி, குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது எந்த விதமான பாதகமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என்ற மம்தா பானர்ஜி, பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர இதுவே தனது கடைசி முயற்சி என்றார்.