"காசிக்கும், தமிழக மக்களுக்கும் 1000 ஆண்டுகள் இணைப்பு உள்ளது" - ஆளுநர் ஆர்.என்.ரவி
தேசிய பண்டிகைகளில் ஒன்றாக காசி தமிழ் சங்கமம் உருவாக வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி சங்கமம் 2.0 பயணம் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி, ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி, கடந்த ஆண்டு காசி சங்கமம் நிகழ்ச்சியில் செயல்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மார்கழி மாதத்தின் திருவிழாக்களில் ஒன்றாக காசி சங்கமம் இணைந்துள்ளது என்றார். காசிக்கும் - தமிழக மக்களுக்கும் ஆயிரம் ஆண்டுகள் இணைப்பு உள்ளதாக தெரிவித்த ஆளுநர், இவை எல்லாம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு பின் மறைந்து இருந்ததாகவும், அதனை மீட்க வேண்டும் என்றும் தெரிவித்தார். காசி தமிழ் சங்கமம் ஒரு தேசிய பண்டிகை போல உருவாக வேண்டும் என்ற ஆளுநர், தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.