ஈரோடு மாவட்டத்தில் உட்கட்சி பூசல் காரணமாகவே அதிமுக தோல்வி அடைந்ததாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நிர்வாகிகள் குற்றம் சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.மக்களவை தேர்தல் முடிவு குறித்து தென்காசி மற்றும் ஈரோடு தொகுதி நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், தென்காசியில் அதிமுக நேரடியாக போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கும் எனவும், கூட்டணி பலம் இல்லாததே தோல்விக்கு காரணம் எனவும் நிர்வாகிகள் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நிலவும் உட்கட்சி பூசல் தொடர்பாக பல நிர்வாகிகள் புகார் அளித்ததாகவும், இதுதான் தோல்விக்கு முக்கிய காரணம் எனவும் எடப்பாடி பழனிசாமியிடம் நிர்வாகிகள் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது, அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினால்தான் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என ஈ.பி.எஸ். அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.