"செய்தி கேள்விப்பட்டேன்.. துளியளவும் விட்டு தர கூடாது" - வாய்ஸை உயர்த்திய ஈபிஎஸ்
தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை துளியளவும் விட்டுக் கொடுக்கக்கூடாது என, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றபோது, மேகதாது அணை விவகாரம், கூட்டத்தின் விவாதப் பொருளில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதுகுறித்து பேச வேண்டும் என்று கர்நாடக தரப்பு அதிகாரிகள் வலியுறுத்தியதாக செய்திகள் தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதற்கு ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, கர்நாடக அரசு அதிகாரிகள் பிரச்சனை எழுப்பியபோது கடுமையாக எதிர்த்து வெளிநடப்பு செய்யாமல், வாக்கெடுப்பில் கலந்து கொண்டது ஏன்? என்றும் வினவியுள்ளார். வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்திருந்தால் மேகதாது பிரச்சனை நீர்வள கமிஷனின் பார்வைக்கு சென்றிருக்காது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.