ரிசல்டுக்கு பின் ராகுலின் மெகா பிளான்.. யார் கையில் பாஜகவின் கடிவாளம்?.. அடிபடும் 2 பெயர்கள்

Update: 2024-06-08 06:33 GMT

நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி ஆட்சியமைக்கிறார் மோடி...

அவரது ஆட்சியையும், அதிரடி முடிவுகளையும் ஒரு கை பார்ப்போம் என சவாலோடு எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறது இந்தியா கூட்டணி. 2014 தொடங்கி மோடி அரசுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சி இல்லை. ஆனால் இப்போது 233 எம்.பி.க்கள் பலத்தோடு எதிர்க்க நிற்கிறது இந்தியா கூட்டணி...

இதில் கூடுதல் ஹைலைட் 10 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கிறது. ஆம்... 2014, 2019 தேர்தல்களில் அந்த பொறுப்பு எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை... 543 இடங்களை கொண்ட மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்க 10%, அதாவது, 54 இடங்களில் ஒரு கட்சி வெல்ல வேண்டும்... ஆனால் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 44 இடங்களிலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 52 இடங்களிலும் வென்ற காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை...

2024 தேர்தல் பிரசாரத்தில், காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து இப்போதும் கிடைக்காது என சவால்விட்டார் பிரதமர் மோடி. ஆனால்... அதற்கு மாறாக 99 இடங்களில் வென்று சவாலை உடைத்திருக்கிறது காங்கிரஸ். ராகுல் அரசியலுக்கு லாய்க்கு இல்லாதவர் என்ற பாஜகவின் பப்பு பிரசார கேலியையும் உடைத்திருக்கிறது ராகுல் - பிரியங்கா கூட்டணி.

பாரத் ஜோடோ யாத்திரை... நியாய யாத்திரை.. என மக்களோடு பயணித்த ராகுல் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள் என அடித்தட்டு மக்களோடு பயணம் செய்ய தொடங்கினார். இப்போது அந்த அனுபவங்களோடு எதிர்க்கட்சி தலைவராக, மக்கள் குரலை நாடாளுமன்றத்தில் எழுப்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கிடைக்கையில், அந்த பதவியை ராகுல் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கிறது.

கேபினட் அந்தஸ்து கொண்டது எதிர்க்கட்சி தலைவர் பதவி. பொது கணக்கு, மத்திய அரசின் இலாக்கா கமிட்டி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சிபிஐ, அமலாக்கப்பிரிவு இயக்குநர்கள் தேர்வு செய்யும் குழுக்களில் இடம் பெறுவார். இந்த மக்களவை தேர்தல் வெற்றியின் நட்சத்திரம் ராகுல் என கூறியிருக்கும் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், அவர்தான் இந்த தேர்தலின் மேன் ஆஃப் த மேட்ச், அவரே எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் நாடாளுமன்றத்தைவிட அரசியல் களத்தில் மோடியை சமாளிக்க ராகுல் அதிக ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதாவது வரவிருக்கும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் ராகுல் தீவிரம் காட்டுவார் என கூறப்படுகிறது.

மறுபுறம் வடகிழக்கு மாநிலமான அசாமின் காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் அல்லது தென் இந்தியாவிலிருந்து திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூரே எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு வரலாம் என்ற பேச்சும் இருக்கிறது. இதில் காங்கிரஸ் இறுதி முடிவு என்ன...? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்