அமைச்சரான ஒரே ஆண்டில் CM... `மார்க்ஸ்+லெனின்' கைக்கு சென்ற டெல்லி நாற்காலி - யார் இந்த அதிஷி

Update: 2024-09-17 13:29 GMT

டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த முதல்வராக அதிஷி மார்லெனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


சிறையில் இருந்து வெளியான இரு நாட்களிலேயே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி காட்ட, அடுத்த முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் அதிஷி மார்லெனா..

டெல்லி அமைச்சரவையில் ஒரே பெண்ணாக இருந்த அதிஷி முதலமைச்சராக நியமிக்கப்படும் அளவிற்கு வளர்ந்தது எப்படி ? என பலரும் வியக்க அசர வைக்கிறது அவரின் பின்புலம்...

பஞ்சாபி மற்றும் ராஜ்புத் குடும்பத்தில், 1981ல் பிறந்த அதிஷியின் மார்லெனாவின் பெயரிலேயே அரசியல் உள்ளது. ஆம், அரசியல் சிந்தனையாளர்களான மார்க் மற்றும் லெனின் பெயரை குறிப்பிடும் வகையில் மார்லெனா என அவரது பெற்றோர் பெயர் வைத்துள்ளனர்.

டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர், வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்றவர். பின்னர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பையும் முடித்தார்.

இப்படி சிறப்பான கல்வி பின்புலம் கொண்ட அதிஷி, 2013ல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். 2015ல் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சரும், கல்வி அமைச்சருமான மணிஷ் சிசோடியாவிற்கு ஆலோசகராக நியமிக்கப்பட்ட அவர் 2018 வரை அப்பணியை தொடர்ந்தார்.

ஆம் ஆத்மி ஆட்சியில் கல்வித்துறை சார்ந்த சீர்திருத்தங்களில் முக்கிய பங்காற்றியவர் அதிஷி...

2019ல் மக்களைவைத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய அவர், 2020ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு, 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார்.

பின்னர் 2023ல் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா சிறைக்கு சென்ற பின், அவரின் கல்வி அமைச்சக இலாகா அதிஷி கைக்கு சென்றது..

அது மட்டுமில்லாமல், மணிஷ் சிசோடியா கவனித்து வந்த, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், கலாச்சாரம், பொதுப்பணித்துறை, சுற்றுலா உள்ளிட்ட இலாகாக்களையும் ஒற்றை ஆளாக கவனித்து வந்தார் அதிஷி...

குறிப்பாக கெஜ்ரிவாலின் கைதுக்கு பிறகு அதிஷியின் நிர்வாகத்தன்மை தனிகவனம் பெற்றது. அரியானா பாஜக அரசாங்கம் டெல்லிக்கு தண்ணீர் திறந்து விடவில்லை எனக்கூறி உண்ணாரவிரத போராட்டம் நடத்தி பரபரப்பை கிளப்பியவர்.

இப்படி பல போராட்டங்களை கடந்து, அமைச்சராக பொறுப்பேற்ற அதிஷி தற்போது டெல்லியின் முதலமைச்சராக உருவெடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது தேசிய அரசியலில் பெரும் கவனத்தை பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்