பாஜகவை பந்தாட இணைத்த கைகள்... காங்., எடுக்கும் பெரும் ரிஸ்க் - இப்போதே தீ பிடித்த `ஜுலானா'
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியாவும், வினேஷ் போகத்தும் காங்கிரசில் இணைந்துள்ளனர்...இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங் மீது மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாலியல் புகாரளித்து போராட்டம் நடத்திய போது அவருடன் துணை நின்று போராடியவர் சக மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா...
சமீபத்தில் பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டி வரை விடாமுயற்சியோடு முன்னேறிய வினேஷ் போகத்...100கிராம் எடை கூடுதலாக இருந்ததாகக் கூறி போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...
ஆனால் சொந்த மண் திரும்பிய வினேஷ் போகத்துக்கு ராஜ வரவேற்பளிக்கப்பட்டது அரியானாவில்...
ஷம்பு கிராம எல்லையில் ஹரியானா விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வினேஷ் போகத் "உங்கள் மகள் உங்களுடன் நிற்கிறேன்" என விவசாயிகளுக்கு உத்வேகம் தந்தார்...
தொடர்ந்து பஜ்ரங் புனியாவும், வினேஷ் போகத்தும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்த நிலையில், காங்கிரஸ் சார்பில் அரியானா சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் போட்டியிடப் போவதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகின...
இதை மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்துடன் இணைத்துப் பேசி விமர்சித்திருந்தனர் பாஜகவினர்...
வரும் அக்டோபர் 5ம் தேதி அரியானா சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பஜ்ரங் புனியாவும், வினேஷ் போகத்தும் காங்கிரசில் இணைந்துள்ளனர்...
முன்னதாக ரயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய வினேஷ் போகத் தனது பணியை ராஜினாமா செய்து கடிதம் வெளியிட்டு, இந்திய ரயில்வேக்கு நன்றி தெரிவித்திருந்தார்...
தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற வினேஷ் போகத்தும் பஜ்ரங் புனியாவும்... காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்...
ஹரியானாவில் ஆம் ஆத்மியுடனான காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது...
இதற்கிடையே, கட்சியில் இணைந்த பஜ்ரங் புனியாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் விவசாய பிரிவு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்ட்டுள்ள நிலையில், வினேஷ் போகத்திற்கு ஜூலானா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மல்யுத்த களத்தில் வெற்றிக்கொடி நாட்டிய இவர்கள், அரசியல் களத்தில் சாதிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....