அதிமுக கூட்டணி முறிவுக்கு காரணம்?அ.மலைக்கு டெல்லி கொடுக்கும் பரிசு.. பாஜகவின் பக்கா ஸ்கெட்ச்

Update: 2024-06-08 07:09 GMT

மறுபுறம் கூட்டணியை டெல்லி தலைமைதான் முடிவு செய்யும் என்கிறார் தமிழிசை

தமிழக அரசியலில் அதிக ஆர்வம் காட்டும் அண்ணாமலை, தன் விருப்பத்தையும், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகங்களையும் டெல்லி தலைமையிடம் ஒப்படைத்துவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியாகியுள்ள நிலையில்... அதிமுகவுடன் கூட்டணி அமையாததால் நாடாளுமன்ற தேர்தலில் பல சீட்களை பா.ஜ.க. இழந்திருப்பதாக ஒரு தரப்பு டெல்லி தலைமைக்கு தகவல் சொல்ல தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைய வேண்டுமானால் அண்ணாமலை தலைமை சாத்தியப்படாது என்ற கோணத்திலும் பா.ஜ.க.வில் கருத்து பரிமாறப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில்தான்.. அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து சென்றுவிட பாஜக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது அண்ணாமலையை மத்திய அமைச்சர் ஆக்கிவிட டெல்லி தலைமை பிளான் போடுவதாக கூறப்படுகிறது.

ஆனால்... அண்ணாமலையோ தமிழக அரசியலிலே அதிகம் நாட்டம் காட்டுகிறார். அவர் 2026 வரையில் தமிழக பாஜக தலைவராக தொடர வேண்டும் என்ற கோஷமும் மாநிலத்திலிருந்து டெல்லி சென்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆனால்... பாஜகவில் இருக்கும் ஒருவருக்கு ஒரு பதவி விதிகள்படி மாநில தலைவர் பதவியிலிருந்து ஆட்டமெட்டிக்காக மாற்றப்படுவார்.

அப்படி அண்ணாமலை மாற்றப்பட்டால்... தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தமிழிசை, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பேராசிரியர் சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்களும் அடிபடுகிறது. இந்த ரேசில் கார்த்தியாயினியும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பாஜக மாநில செயலாளர் ராம சீனிவாசனிடம் பேசியபோது, அண்ணாமலையே தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்பது தனது தனிப்பட்ட விருப்பம் என்றார்.

அண்ணாமலையால்தான் கூட்டணி முறிந்தது என அதிமுகவினர் ஓப்பன் டாக் கொடுக்க, அவரை மாற்றினால் 2026-ல் அதிமுக பாஜகவோடு கூட்டணியை பரிசீலிக்கலாம் என்ற கருத்தும் அதிமுகவில் உலாவுகிறது.

ஆனால் கூட்டணி முடிவு எப்போதுமே டெல்லி தலைமையிடமே என சொல்லும் மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ்.. அதிமுக கூட்டணி பாஜக தலைவர் தேர்வில் முக்கிய இடம் வகிக்காது எனவும் சொல்கிறார்.

இதில் டெல்லி மாஸ்டர் பிளான் எப்படியிருக்கபோகிறது... மோடி அமைச்சரவை பதவியேற்பு மேடையில் அண்ணாமலை ஏறுவாரா...? தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவாரா...? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பல்ஸை எகிற வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்