பழைய BDO அலுவலகத்தை இடிப்பது யார்? - அதிமுக - திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்
மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பழைய கட்டடத்தை யார் இடிப்பது என்ற போட்டியில் அதிமுக திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட அரசு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, பழைய கட்டடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கும் பணியில், அதிமுக சேர்மன், கவுன்சிலர்கள் ஈடுபட்டனர். அப்போது புதிய கட்டடம் கட்டும் பணியை ஒப்பந்தம் எடுத்தவருக்கு ஆதரவாக வந்த திமுக மாவட்ட கவுன்சிலர் மகாலட்சுமி உள்ளிட்டோர், அதிமுகவை சேர்ந்தவர்கள் இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து சமாதானம் பேசிய போலீசார், சுமூக பேச்சுவார்த்தை நடத்திய பிறகே பணியை தொடங்க வேண்டும் எனக்கூறினர். ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலர் புனிதா அலுவலகம் வராததால், அதிமுக, திமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.