சென்னை உள்ளிட்ட நகரங்களில் வீடு கட்டிட அனுமதி பெறுவதற்கான வரைபட கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சொத்து வரி, பதிவுக் கட்டணம், கட்டுமான பொருள்கள் விலை என அனைத்தையும் உயர்த்தி, பொதுமக்களின் சொந்த வீடு கனவைத் அரசு தகர்த்திவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தற்போது, வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தி அதிர்ச்சி அளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, பொதுமக்கள் சுயசான்று அளித்து, வரைபட அனுமதி பெற, அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன விதமான நடைமுறை? எனக் கேள்வி எழுப்பினார். பொதுமக்கள் எதிர்பார்த்தது, காலதாமதமின்றி வரைபட அனுமதி வழங்குவதையே தவிர, இரண்டு மடங்கு அதிகக் கட்டணத்தை அல்ல எனக் குறிப்பிட்ட அவர், உடனடியாக, சுயசான்று அடிப்படையில் வரைபட அனுமதி வழங்குவதற்கான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.