துணை வேந்தர் தேர்வு - திருமாவளவன் கோரிக்கை
தமிழக பல்கலைக் கழகங்களில் துணை வேந்தராக பிற மாநிலத்தவரை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஏற்கனவே, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக நியமித்ததால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களை யாரும் மறந்து விடவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சூழலில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தமிழர் அல்லாதோரும் மனு செய்வது எந்த நம்பிக்கையில் எனக் கேள்வி எழுப்பியுள்ள திருமாவளவன் துணைவேந்தர் போன்ற உயர் பதவிகளில் பிறமாநிலத்தவர்கள் அமரத் துடிப்பது தமிழக நலன்களுக்கு மிகவும் ஆபத்தானது என எச்சரித்துள்ளார். தமிழக பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை தமிழக அரசு தான் தேர்வு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக அரசு தேர்வு செய்யும் துணைவேந்தர்களை அவற்றின் வேந்தரான ஆளுநர் அங்கீகரிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.