பீகார் சட்டப்பேரவை தேர்தல் - பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்
பீகார் சட்டப் பேரவை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.
243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க. இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தலைநகர் பாட்னாவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசும் போது, கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை பா.ஜ.க. நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்த நிர்மலா சீதாராமன், எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிதிஷ்குமார் தான் முதலமைச்சர் என தெரிவித்தார். அவருடைய சீரிய தலைமையின் கீழ், பீகார் நாட்டிலேயே வளர்ச்சியில் தலைசிறந்த மாநிலமாக மாறும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில், பீகார் மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.பீகாரில் வரும் 2022-க்குள் மத்திய அரசு நிதியுதவியில், 30 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.தொழில் நுட்ப பூங்காவின் மையமாக பீகார் 5 ஆண்டுகளில் மாற்றப்படும் எனவும், 19 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 3 லட்சம் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், மருத்துவம், பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும் என்றும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.