சோனியா காந்தியின் ஆதரவாளரா, நீதிபதி எஸ்.முரளிதர்?
டெல்லி வன்முறை வழக்கில் பா.ஜ.க. தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி எஸ்.முரளிதர், சோனியா காந்தியின் ஆதரவாளர். அவருக்கு வழக்கறிஞராக பணியாற்றியதால் முரளிதருக்கு நீதிபதி பதவி கிடைத்தது என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.
1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பிறந்த எஸ்.முரளிதர், 1984ஆம் ஆண்டு சென்னையில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். அதன் பிறகு 1987ஆம் ஆண்டு டெல்லிக்கு இடம்பெயர்ந்த அவர், டெல்லி உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் போபால் வாயு கசிவு வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் வாதாடினார்.
* 2006ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்ற எஸ்.முரளிதர், ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என தீர்ப்பளித்தது, நீதிபதிகள் சொத்து விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்க அனுமதித்தது, உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம்களைக் கொன்றதற்காக முன்னாள் காவல்துறையினர் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது, சீக்கியர் கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸைச் சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது, மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருந்ததாக சிறையில் அடைக்கப்பட்ட சமூக ஆர்வலர்கள் கவுதம் நவலகா உள்ளிட்டோருக்குப் பீமா கோரேகான் வழக்கில் ஜாமீன் வழங்கியது ஆகிய முக்கிய வழக்குகளில் நீதிபதி எஸ்.முரளிதர் அளித்த தீர்ப்புகள், நீதித்துறையில் பரபரப்பை பற்றவைத்தவை.
* வழக்கறிஞர்கள் மைலார்ட் என தன்னை அழைக்க கூடாது என்றும், தனக்கு முன் தவாலி மணியடித்து ஓசை எழுப்ப கூடாது என்றும் சொல்லி நீதித்துறையில் மரபை உடைத்து புரட்சியை புகுத்தியவர் நீதிபதி எஸ்.முரளிதர். இதனால் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் மதிப்பிற்குரியவராக பார்க்கப்பட்டார்.
* டெல்லி வன்முறை வழக்கில் பா.ஜ.க. தலைவர்களை கண்டித்ததுடன் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நிலையில், நீதிபதி எஸ்.முரளிதர் பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் கண்டனங்கள் எழுந்ததால், ஏற்கனவே கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.
* இந்த மாபெரும் வரலாற்றின் பின்னணியில்தான், நீதிபதி எஸ்.முரளிதர் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
* 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சோனியா காந்தி, ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தபோது, அவருடன் நீதிபதி எஸ்.முரளிதர் சாயலில் வழக்கறிஞர் உடை அணிந்த ஒருவர் அமர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டவர்கள், இது நீதிபதி எஸ்.முரளிதர் என குறிப்பிட்டு விமர்சனக் கணைகளை ஏவுகின்றனர்.
* இது தவறான தகவல், சோனியா காந்தியுடன் இருக்கும் வழக்கறிஞர் கே.சி.கௌசிக். அவரைத்தான் எஸ்.முரளிதர் என பதிவிட்டு வருகின்றனர்.
* 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி இளைஞர் காங்கிரஸின் டுவிட்டர் பதிவில் வழக்கறிஞர் கே.சி.கௌசிக் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதையே சிலர் எடுத்து, நீதிபதி முரளிதர் என குறிப்பிட்டுள்ளனர்.
* ராகுல்காந்தி இத்தாலி குடியுரிமை வைத்திருக்கிறார் என தேர்தலின்போது குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகி வாதாடியவர் கே.சி.கௌசிக். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி அவர் அளித்த பேட்டியை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தனது யுடியூபில் பதிவேற்றம் செய்துள்ளது.
* 2019ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நீதிபதி எஸ்.முரளிதர், சோனியா காந்திக்கு வழக்கறிஞராக இருந்தார் என்ற தகவல், தவறான தகவல்.... சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படத்தில் இருப்பவர் நீதிபதி எஸ்.முரளிதர் அல்ல, வழக்கறிஞர் கே.சி.கௌசிக்...