"அன்று எம்.பி. பேசிய தகாத பேச்சால் ஆத்திரமடைந்தார்" - உதவி காவல் ஆய்வாளராக இருந்தவர் தற்போது எம்.பி.,
ஆந்திராவில் உதவி காவல் ஆய்வாளராக இருந்த ஓருவர், நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் கடிரி பகுதியில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கோரண்ட்லா மாதவ். கடந்த 2018ம் ஆண்டு ததிபாத்ரி பகுதியில் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் ஓடி விட்டதாக, அனந்தபூர் தொகுதி எம்.பி.யாக இருந்த திவாகர் ரெட்டி கூறினார். மேலும் போலீஸாரை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்ததால், அங்கு பணியில் இருந்த மாதவ் ஆத்திரமடைந்தார். இந்த சம்பவம்தான் அவரை அரசியலில் கால் பதிக்க காரணமாக இருந்தது. தனது பதவியை கடந்த டிசம்பர் மாதம் ராஜினாமா செய்த அவர், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்துபூர் தொகுதியில் போட்டியிட்டு, 1 லட்சத்து 40 ஆயிரத்து 748 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை நாளின்போது, வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த தனது முன்னாள் உயர் அதிகாரிக்கு, அவர் சல்யூட் அடிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.