கணவரை கொலை செய்ததாக மனைவி வாக்குமூலம்... ஒன்றரை வருடம் கழித்து உயிருடன் வந்ததால் அதிர்ச்சி...

Update: 2023-07-28 19:37 GMT
  • கணவனை கொன்னு புதைச்சிட்டதா மனைவி போலீஸ்கிட்ட வாக்குமூலம் கொடுத்திருந்த நிலையில் தீடீர்னு அந்த கணவன் உயிரோட வந்திருக்காரு. என்ன நடந்துச்சி... ஏனிந்த பொய் வாக்குமூலம்?
  • கேரளா மாநிலம் , அடூர் பகுதி... அன்று பரபரப்பில் அரண்டுபோயிருந்தது.
  • காவல்துறை, தடயவியல் நிபுணர்கள் , அரசு அதிகாரிகள் என அனைவரும் பெண் ஒருவர், அடையாளம் காட்டிய இடத்தை சல்லடை போட்டு சலித்தெடுத்தனர்
  • ஒன்றரை வருட காலமாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்தவரை திடீரென மனைவியே கொன்று புதைத்ததாக கூறிய வாக்குமூலம் தான் இத்தனை பரபரப்புகளுக்கும் காரணம்.
  • ஆனால் , அந்த பெண் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து ஒரு எலும்பு துண்டுகூட கிடைக்கவில்லை. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் கணவரை கொன்று ஆற்றில் வீசியதாகவும் , சடலத்தை கிணற்றில் போட்டதாகவும் மாறி மாறி பேசி போலீசாரை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.
  • கொல்லப்பட்டவரின் உடலை தேடி சென்ற காவல்துறையினருக்கு காத்திருந்தது ஒரு பெரும் அதிர்ச்சி... ஒன்றரை வருடமாக கேரளா போலீசை மர்மத்தில் ஆழ்த்திய இந்த வழக்கிற்கு ஒருவழியாக விடை கிடைத்திருக்கிறது.
  • ஆம், மனைவியால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட கணவர் மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறார்.
  • என்ன நடந்தது ? ஒன்றரை வருடங்களாக காணாமல் போனவர் ஸ்லீப்பர் செல்லாக வாழ்ந்ததற்கு யார் காரணம் ? உயிருடன் இருப்பவரை மனைவியே கொன்று புதைத்ததாக கூறியது ஏன்? போன்ற புரியாத புதிர்களுக்கு விடைதேடி விசாரணையை தொடங்கியது நமது குற்றச்சரித்திரம் நிகழ்ச்சிக்குழு.
  • கேரளா மாநிலம் பத்தனம்திட்டா அருகேயுள்ள கலத்தூர் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத். மீன் வியாபாரம் செய்து வந்த இவர், அப்சானா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணமான சில வருடங்களில் தம்பதி அடூர் பகுதியிலுள்ள வாடகை வீட்டுக்கு குடியேறி இருக்கிறார்கள்.
  • கணவன் மனைவிக்கு இருவருக்கும் ஒன்றாக மது அருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது. குடியும் குடித்தனமுமாக வாழ்ந்த தம்பதிக்கிடையே தினமும் போதையில் சண்டையும் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் இருவரும் ஒருவர் மாறி மற்றொருவர் அடித்து கைகலப்பில் ஈடுப்படுவது வழக்கம்.
  • இந்த சூழலில் தான் கடந்த 2021 ம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு முழுவதும் கணவன் மனைவிக்கிடையே கடுமையான யுத்தம் நடந்திருக்கிறது. கணவனை மனைவியும், மனைவியை கணவரும் கொலை செய்யும் அளவிற்கு வன்மத்தோடு சண்டையிட்டிருக்கிறார்கள்.
  • மறுநாள் பொழுது விடிந்த போது வீட்டை வெளியேறிய நஷ்வாத் அதன்பிறகு மீண்டும் வீடு திரும்பவே இல்லை. அப்சானா மீது சந்தேகமடைந்த நஷ்வாத்தின் தந்தை மகனை காணவில்லையென காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.
  • இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஒன்றரை வருடங்களாக விசாரணை நடந்துவந்த நிலையில், கதையின் திடீர் திருப்பமாக அப்சானா தான் கணவரை கொன்று புதைத்துவிட்டதாக பரப்பரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
  • அப்சானாவின் வாக்குமூலத்தை தொடர்ந்து வழக்கின் விசாரணை வேகமெடுத்திருக்கிறது. நஷ்வாத்தின் சடலத்தை தேடி தனிப்படையினர் விரைந்திருக்கிறார்கள். ஆனால், அப்சானா அடையாளம் காட்டிய இடங்களிலிருந்து கொலைக்கான எந்த தடயமும் சிக்கவில்லை.
  • இந்த சூழலில் கணவரை கொன்றதாக அப்சானா அளித்த வாக்குமூலம் கேரளா முழுவதும் காட்டு தீயாய் பரவி இருக்கிறது. இந்த செய்தியை பார்த்து அதிர்ந்து போன நஷ்வாத் தான் உயிருடன் இருக்கும் தகவலை உறவினர் ஒருவருக்கு ரகசியமாக தெரிவித்திருக்கிறார்.
  • இதனை துப்புதுலக்கிய காவல்துறையினர் தொடுபுழா பகுதியில் தலைமறைவாக இருந்த நஷ்வாத்தை தட்டி தூக்கி இருக்கிறார்கள்.
  • அவரிடம் நடந்த விசாரணையில் குடிகார மனைவியின் டார்ச்சர் தாங்காமல் தான் இத்தனை காலம் ஸ்லிப்பர் செல்லாக வாழ்ந்து வந்ததாக வாக்குமூலம் கொடுத்து காவல்துறையை அதிர வைத்திருக்கிறார்.
  • கணவன் உயிருடன் இருக்கும் போதே அப்சானா அவரை கொலை செய்துவிட்டதாக கூறியது ஏன் ? என விசாரித்தப்போது நஷ்வாத் மாயமான நாள் முதல் அப்சனாவின் மனநலம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.அந்த குழப்பத்தில் இருந்த அப்சனா போதையில் கணவனை கொன்றிருக்கலாம் என்ற கற்பனையில் போலீசாரிடம் பொய் வாக்குமூலம் கொடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
  • மனைவியை கொலை குற்றவாளியாக்க கூடாதென வெளிச்சத்திற்கு வந்த நஷ்வாத்திடமும், கணவரை பிரிந்த சோகத்தில் மனம்நலம் பாதிக்கப்பட்ட அப்சானாவிடமும் தற்போது மனநல ஆலோசகர்களை கொண்டு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்