திருப்பதி லட்டில் அசைவமா? "விலங்கு கொழுப்பு கலப்பு..'' புனிதத்தை திட்டமிட்டு கெடுத்தாரா ஜெகன்?

Update: 2024-09-19 16:32 GMT

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் போது, திருப்பதி கோயிலின் லட்டு பிரசாதம் தயார் செய்ய விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

திருப்பதி நோக்கி படையெடுக்கும் பக்தர்கள் அனைவரும் வரப்பிரசாதமாக எண்ணுவது அங்கு பிரசாதமாக கொடுக்கப்படும் லட்டைத் தான்...

இந்த பிரசாத லட்டு பக்தர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறதோ...அதே அளவிற்கு ஆந்திர அரசியலிலும் அதி முக்கியத்துவம் பெறுகிறது.

ஆம், இரு பெரும் கட்சிக்கு இடையே அரசியல் சூழலையே பரபரப்பாக்கி இருக்கிறது திருப்பதி லட்டு...

ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைந்து 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதனை முன்னிட்டு மங்களகிரியில் நடந்த கூட்டம் ஒன்றில் மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டு குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

இதற்கு முன்பாக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியின் போது, திருப்பதியின் புனிதமாக கருதப்படும் பிரசாத லட்டில், முழுவதுமாக கலப்படம் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தி வந்ததாக கூறியதோடு, குறிப்பாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை பயன்படுத்தி லட்டு தயாரித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்...

ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தரமான பொருட்களை பயன்படுத்தி பிரசாதங்கள் தயாரித்து வருவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்..

இந்த கருத்தை கடுமையாக எதிர்த்துள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தரப்பு, குற்றச்சாட்டை மறுத்துள்ளது..

இதுகுறித்து பேசிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பியான ஒய்.வி. சுப்பா ரெட்டி, அரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு எந்த எல்லைக்கும் செல்வார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக குறிப்பிட்டதோடு, பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த தானும் தனது குடும்பத்தினரும் திருமலை பிரசாதம் குறித்து ஏழுமலையான் முன் சத்தியம் செய்ய தயாராக உள்ளோம், சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் இதைச் செய்ய தயாராக இருக்கிறாரா என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஏற்கனவே, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனத்தில் முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா முறைக்கேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு நிலவி வரும் சூழலில், திருப்பதில் லட்டு குறித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

திருப்பதியும் லட்டும் இன்னும் என்னென்ன விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்போகிறதோ? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்