ஆந்திராவில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்கள் -60 வழக்குகளில் தேடப்பட்ட நபருக்கு செக் வைத்த போலீசார்
ஆந்திராவில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தை சேர்ந்த 30 பேர் உட்பட 31 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சந்தலப்பாடு சந்திப்பில், செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 வாகனங்களில் செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு 25 லட்சம் ரூபாயாகும். கடத்தலில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்து, இரண்டு லாரிகளையும், செம்மரக்கட்டைகளையும்பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 30 செல்போன்கள், கோடாலிகள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மற்றொருவர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த ராமநாத ரெட்டி என்பதும், அவர் மீது செம்மரம் கடத்தியதாக 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும், பல ஆண்டுகளாக காவல்துறையினர் தேடி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.