பெங்களூருவுடன் முக்கிய மாவட்டம் இணைப்பா? - DKS பேச்சால் அரசியல் களத்தில் பரபரப்பு
பெங்களூருவுடன் ராமநகரா மாவட்டம் இணைப்பதாக கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியது அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கனகபுரா வட்டத்திற்கு உட்பட்ட சிவனஹள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தனிப்பட்ட அரசியல் உள் நோக்கத்திற்காக ராமநகரா பிரிக்கப்பட்டதாகவும், விரைவில் பெங்களூருவுடன் இணைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். எனவே, விவசாயிகள் யாரும் அவசரப்பட்டு நிலத்தை விற்க வேண்டாம் என டி.கே.சிவக்குமார் கேட்டுக்கொண்டார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் குமாரசாமி, இந்த புதிய நாடகத்திற்கான ஒரே காரணம் டி.கே.சிவக்குமாரின் சொத்து மதிப்பை அதிகரிப்பதுதான் எனக் குற்றம்சாட்டினார். ராமநகரா மாவட்ட மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.