இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம், டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்க டி.ஆர். பாலு டெல்லி சென்றுள்ளார். ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகளைப் பொறுத்து, முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி பயணம் அமையும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, புயல் நிவாரணப் பணிகள் காரணமாக, இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.