திரௌபதி முர்மு கடந்து வந்த பாதை |

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்து வந்த பாதையை தற்போது காணலாம்.

Update: 2022-06-22 02:01 GMT

ஒடிசாவின் மயூர்பான்ஞ் மாவட்டம் பைதாபோஸி கிராமத்தில் 1958 ம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி பிறந்தவர் திரௌபதி முர்மு, ஒடிசாவின் பூர்விக பழங்குடி இனமான சந்தால் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.

இவரது கணவர் பெயர் ஷ்யாம் சரண் முர்மு. தனது கணவரையும், இரண்டு மகன்களையும் இழந்த திரௌபதி முர்முவுக்கு தற்போது இட்டிஸ்ரீ முர்மு என்ற மகள் மட்டுமே உள்ளார்.


ஆசிரியராக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய திரௌபதி முர்மு, பாஜகவில் இணைந்து 1997 ம் ஆண்டு கவுன்சிலரானார். அதே ஆண்டு ராய்ராங்பூர் நகராட்சியின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் பாஜகவின் பழங்குடியினர் பிரிவின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட திரௌபதி முர்மு, 2002 - 2009 காலகட்டத்தில் ராய்ராங்பூர் தொகுதியிலிருந்து மாநில சட்டமன்றத்திற்கு இரண்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிஜு ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சியில் 2000 முதல் 2002 வரை தனிப் பொறுப்புடன் கூடிய போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சராகவும், 2002 முதல் 2004 வரை மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சராகவும் திரௌபதி முர்மு பொறுப்பு வகித்தார்.


2013 ம் ஆண்டு பாஜகவின் பழங்குடியினர் பிரிவின் தேசிய செயலாளராக தேர்வு செய்யப்பட்ட திரௌபதி முர்மு, 2015 ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரான அவர், 2021 வரை அப்பொறுப்பினை வகித்து, ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக 5 ஆண்டுகளை நிறைவு செய்த ஒரே நபர் என்ற சாதனையையும் படைத்தார்.

குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அவர், பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் குடியரசு தலைவராகவும், இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசு தலைவராகவும் திகழ்வார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்