பீகாரில் கடந்த 1995-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவின்போது, தனது விருப்பத்திற்கு மாறாக வாக்களித்த தரோகா ராய், ராஜேந்திர ராய் ஆகிய இருவரை சுட்டுக்கொன்றதகாகவும், மற்றொரு பெண்ணை சுட்டுக்கொல்ல முயன்றதாகவும், ராஷ்டீரிய ஜனதா தள முன்னாள் எம்.பி பிரபுநாத் சிங்குக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, அவரை விசாரணை நீதிமன்றம் விடுவித்ததை, பாட்னா உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே கவுல் தலைமையிலான அமர்வு, பாட்னா உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ததுடன், பிரபுநாத் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொலையுண்டவர்களின் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டது.