மத்திய அரசின் இணை செயலாளர், துணை செயலாளர், இயக்குநர் போன்ற பதவிகளுக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். இதில் நேரடி நியமனம் என்று, அரசுப் பணியில் இல்லாத துறை சார்ந்த வல்லுநர்களை நியமிக்கும் நடைமுறையை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. மத்திய அரசின் 24 அமைச்சகங்களில் 45 அதிகாரிகள் பணியிடங்களை நேரடி நியமனம் வாயிலாக நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி சமீபத்தில் வெளியிட்டது. இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், மத்திய அரசில் அதிகாரமிக்க பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்டவர்கள் திணிக்கப்படுகிறார்கள், உயர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை ஒழிக்க மோடி அரசு சதி செய்கிறது என்று விமர்சித்தன. பாஜக கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தியும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சூழலில் நேரடி நியமன அறிவிப்பை ரத்து செய்யுமாறு யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.