பெங்களூருவில் குக்கர் வெடித்த இடத்தில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
பெங்களூரு ஜே.பி. நகர் 24வது பிரதான சாலையில் உடுப்பி உபஹார் ஓட்டல் அருகே குக்கர் வெடித்ததில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சமீர், மோசின் என இருவர் காயம் அடைந்தனர். முதல்கட்ட விசாரணையில் விசில் வெளியேறாததால் சாதாரணமாக குக்கர் வெடித்ததாக கூறப்பட்டது. ஆனால், குக்கர் வெடிப்பு தீவிரமாக இருந்ததாலும், வீட்டில் பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்ததாலும், சம்பவ இடத்தில் எரிந்த கம்பிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாலும் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் போல் இருக்கலாமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதனையடுத்து தேசிய புலனாய்வு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டுள்ளனர். ஆனால் பெங்களூரு நகர ஆணையர், இது சாதாரண குக்கர் வெடிப்புதான் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக குறிப்பிட்டார். இருப்பினும் சுதந்திர தினம் நெருங்கி உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் மிக தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.