மிகச் சிறந்த உலக நன்மைக்காக தெற்குலக நாடுகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உலகளாவிய தெற்குலக நாடுகளின் 2வது உச்சி மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
இதில், மொரீஷியஸ், பங்களாதேஷ், பூட்டான், இந்தோனேசியா, மடகாஸ்கர், கென்யா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை இந்தியா கண்டித்திருப்பதாகவும், அதே சமயம் பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க உறவிற்கு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
புதிய தொழில்நுட்பங்கள், உலகளாவிய வடக்கு மற்றும் தெற்குலக நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகரித்து விடக்கூடாது என தெரிவித்த பிரதமர் மோடி, உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு மாநாட்டை அடுத்த மாதம் இந்தியா நடத்த இருப்பதாக குறிப்பிட்டார்.