தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.1,584 கோடி ஒதுக்கீடு
தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு இந்த நிதியாண்டிற்கு, ஆயிரத்து 584 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி மூலமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். அப்போது பொது இடங்களில் வைஃபை சேவைகள் வழங்க மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக, பொது தரவு அலுவலகங்கள் மூலம் வைஃபை சேவையை வழங்க நெட்வொர்க்குகளை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறினர். இந்த திட்டம் PM WANI என அழைக்கப்படும் என்றும், கொச்சி மற்றும் லட்சத்தீவு இடையே, ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர். செல்போன் சேவை இல்லாத 2 ஆயிரத்து 374 கிராமங்களுக்கு, சேவைகள் வழங்கும் தொலைத்தொடர்பு திட்டம், தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஆயிரத்து 584 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளனர்.