சுகாதார பணியாளர்கள் புகார்களை தெரிவிக்க சிறப்பு உதவி எண்...
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தூய்மை பணியில், ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், புகார்களை தெரிவிக்க சிறப்பு உதவி எண் ஏற்படுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தேசிய கோவிட்-19 மேலாண்மை நடைமுறையை உருவாக்கவும், மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஒருங்கிணைந்த செவிலியர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு, நீதிபதிகள் என்.வி.ரமணா, எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, புகார்களை தெரிவிக்க சுகாதாரப் பணியாளர்களுக்கென பிரத்யேகஉதவி எண் ஏற்படுத்தப்படும் என கூறினார். புகார் தெரிவித்த 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசின் சொலிசிட் ஜெனரல் உறுதி அளித்தார். இதனை ஏற்ற நீதிபதிகள், சுகாதாரப் பணியாளருக்கும் பாதுகாப்புச் சாதனங்கள் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி செவிலியர் சங்கத்தின் மனுவை, முடித்து வைத்தனர்.