"வங்கி சேமிப்புக்கான காப்பீட்டு வரம்பை உயர்த்த முடிவு" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து, கூட்டுறவு வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் சேமிக்கப்படும் பணத்துக்கான காப்பீட்டு வரம்பு தற்போது ஓரு லட்சம் ரூபாயாக உள்ள நிலையில் அதனை அதிகரிக்க திட்டமட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், பல நிலைகளில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், இதற்காக சட்ட முன்வடிவுகள் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் செலவினத்தை குறைக்கும் திட்டம் இல்லை என்றும், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவழிக்க அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். எந்தவொரு நிறுவனமும் முடங்கிப் போக வேண்டும் என அரசு கருதவில்லை என்றும், எல்லா நிறுவனங்களும் செழிக்க வேண்டும் எனவே விரும்புவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியை விட, மாநில அரசுளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாகவும், பல கூட்டுறவு வங்கிகள் தோல்வி அடைவதற்கு காரணம் தவறான ஏமாற்றும் வகையிலான கடன் வழங்கும் முறை தான் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எனவே கூட்டுறவு வங்கிகளை, இந்திய ரிசர்வ் வங்கி வரையறைக்குள் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.