அருண் ஜெட்லி கடந்து வந்த பாதை...

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மத்திய முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று மரணமடைந்தார்.

Update: 2019-08-24 08:54 GMT
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண்ஜெட்லி காலமானார். அவருக்கு வயது 66. கடந்த 1952 ஆண்டு டெல்லியில் பிரபல வழக்கறிஞராக திகழ்ந்த மகராஜ் கிஷன் ஜெட்லிக்கும்,  இரத்தன் பிரபாவுக்கும் மகனாக அருண் ஜெட்லி பிறந்தார். டெல்லியில் பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்த அருண்ஜெட்லி 1977ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர் ஆனார். படிப்பு, பேச்சில் சிறந்து விளங்கிய அருண்ஜெட்லி கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அரசியல் ஆசை கொண்ட அருண் ஜெட்லி டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

ஊழலுக்கு எதிரான ஜனதா கட்சி நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட அருண்ஜெட்லி அக்கட்சியில் இணைந்தார். அருண் ஜெட்லியின் மனைவி பெயர் சங்கீதா, அவர்களுக்கு சோனாலி என்ற மகளும், ரோஷன் என்ற மகனும் உள்ளனர். இருவருமே வழக்கறிஞர்கள் ஆவர். ஜெய்பிரகாஷ் நாரயணனின் தீவிர ஆதரவாளரான அருண் ஜெட்லி, எமர்ஜென்சி காலத்தில் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். 1977 ஆம் ஆண்டு காங்கிரசை தோற்கடித்து ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த போது அருண் ஜெட்லி, அகில பாரதீய வித்யாதி பரிஷத் அமைப்பின் அகில இந்திய செயலாளராக நியமிக்கப்பட்டார். 1980ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அருண் ஜெட்லி அக்கட்சியில்  டெல்லி இளைஞரணி செயலாளராக ஆனார். 

1991 ஆம் ஆண்டு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட அருண் ஜெட்லி பின்னர் 1999 ஆம் ஆண்டு அக்கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் ஆனார். 1999 ஆம் ஆண்டு அப்போதைய பாஜக அரசில் அருண் ஜெட்லி தகவல் தொழல் நுட்பத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். சட்டத்துறையை அவர் கூடுதல் பொறுப்பாக கவனித்தார். 2000-வது ஆண்டில் அருண்ஜெட்லி முதல்  முறையாக குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு  தேர்தெடுக்கப்பட்டார்.  மீண்டும் அவர் மத்திய சட்டத்துறை இணை அமைச்சரானார். கப்பல் போக்குவரத்துறை  அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்தார். 

பின்னர் ராம்ஜெத்மலானி பதவி விலகியதால் அருண்ஜெட்லி மத்திய சட்டத்துறை அமைச்சரானார். அவரது பதவி காலத்தில் சிவில் மற்றும் குற்றவியல் நடமுறை சட்டங்களில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. 2002ல் பாஜக பொது செயலாளரான அருண் ஜெட்லி, 2003 ல் மீண்டும் மத்திய அமைச்சராகி 2004 ஏப்ரல் வரை பதவியில் நீடித்தார். 2006 மற்றும் 2012ல் மீண்டும் குஜராத்திலிருந்து அருண்ஜெட்லி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2014 ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜக மீண்டு ஆட்சி அமைந்த போது அருண்ஜெட்லி மத்திய நிதி அமைச்சரானார். அப்போதுதான்
ஆயிரம், 500 ரூபாய் நோட்டுக்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  இக்கால கட்டத்தில்  பாதுகாப்பு துறையையும் அருண்ஜெட்லி  கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானதும் , அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் பதவியேற்க மறுத்து கடிதம் எழுதினார். 

1977 முதல் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்த அருண்ஜெட்லி, பல உயர்நீதிமன்றங்களில் வழக்காடி உள்ளார். போபர்ஸ் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் ஆஜராகியுள்ள அருண் ஜெட்லி தமது வாத திறமையால் ஏராளமான வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் துணை தலைவராக இருந்த அருண்ஜெட்லி , ஐபிஎல் மேட்ச் பிக்சிங் புகார் எழுந்த போது தமது பதவியை ராஜினாமா செய்தார்.
Tags:    

மேலும் செய்திகள்