பயிற்சி மையத்தில் திடீர் தீ விபத்து - பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
குஜராத் மாநிலம் சூரத் நகரில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் தக்ஷீலா எனும் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில், பயிலும் மாணவர்களுக்கு நடனம், மற்றும் நவ நாகரீக ஆடைகள் தயாரிப்பு குறித்து கற்றுத்தரப்படுகிறது. சர்தானா எனும் பகுதியில், உள்ள கட்டடத்தில் நான்காவது மாடியில் இயங்கி வந்த இம்மையத்தில் திடீரென்று தீ விபத்து நிகழ்ந்தது.
கொழுந்து விட்டு எரிந்த தீ மளமளவென அடுத்தடுத்த தளத்திற்கும் பரவியதால் மாணவர்கள் அலறியடித்தபடி அங்கும் இங்கும் ஓடினர். ஒரு சிலர் உயிரை காப்பாற்றிக்கொள்ள 3 மற்றும் 4 வது மாடியிலிருந்து கீழே குதித்தனர்.
கட்டிடத்தில் இருந்து கீழே குதித்ததிலும், தீயிலும் சிக்கி இதுவரை 20 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பலர் காயமடைந்ததால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மாணவர்கள் அலறியடித்தபடி கீழே குதிக்கும் வீடியோ காட்சிகள் நெஞ்சை பதை பதைக்க செய்கிறது. இக்காட்சிகள், சமூக வலைத்தளத்திலும் வேகமாக பரவி வருகிறது.
இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாயை, இழப்பீடாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்கவும், உத்தரவிடப்பட்டுள்ளது.