நள்ளிரவு வரை வாக்களித்த ஆந்திர வாக்காளர்கள்...
ஆந்திர மாநிலத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால், பல வாக்குச்சாவடியில் நள்ளிரவு 12 மணி வரை வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று காலை 7 மணி முதல் 25 மக்களவை மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பல இடங்களில் இயங்காததால், காலை 9 மணி வரை நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு தொடங்கவில்லை. விஜயநகர் மாவட்டத்தில் பகல் 12 மணிவரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு சாவடியில் இயங்கவில்லை. இதேபோல் குண்டூர் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் பிற்பகல் 3 மணிக்கு மேல் தான் வாக்குப்பதிவு தொடங்கியது. இதன் காரணமாக மாலை 6 மணி வரை வாக்குச்சாவடிக்கு வந்து காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் இரவு 12 மணி வரை வாக்களிக்க அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடு செய்தனர். கோதாவரி, குண்டூர் , நெல்லூர், பிரகாசம், கர்னூல், விஜயவாடா மாவட்டங்களில், மாலை 6 மணிக்கு மேல் 6 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் இரவு 9 மணிக்கு மேல் 720 வாக்குச்சாவடிகளிலும் 10 மணிக்கு மேல் 250 வாக்குச் சாவடிகளிலும் 11:30 மணிக்கு மேல் 49 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.