அரசியல் கட்சிகள் ராணுவத்தினரின் புகைப்படங்களை பயன்படுத்த தடை
அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் மற்றும் பிரசாரத்தில் ராணுவத்தினரின் புகைப்படத்தை பிரசுரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சில அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் விளம்பரம் மற்றும் பிரசாரத்தில் ராணுவத்தினரின் புகைப்படத்தை பயன்படுத்துவதாக தெரியவந்தது. இதை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், தேர்தல் விளம்பரங்களிலும், பிரசாரத்திலும் ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ராணுவத்தினரை பொறுத்தவரை எல்லையைக் காக்கும் வீரர்களாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இந்திய அரசியல் அமைப்பை காக்கும் பாதுகாவலர்களாகவும் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அரசியல் பாகுபாடு இல்லாத, நடுநிலை வகிப்பவர்கள் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானை, அனைத்து மாநில தேர்தல் ஆணையத்திற்கும் சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.