சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கு விவகாரம் : சி.பி.ஐ. முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ஆஜர்
சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று நேரில் ஆஜரானார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மேகாலயா தலைநகர் ஷில்லாங் நகரில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக ராஜீவ்குமார் நேற்று மாலை ஷில்லாங் சென்றார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக 14 பேர் கொண்ட சிபிஜ அதிகாரிகள் குழுவும் ஷில்லாங் விரைந்தது. சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான ராஜீவ் குமாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜீவ் குமாருக்கு எதிராக கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க கூடாது என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் தொடர்பான ஆவணங்களை ராஜீவ்குமார் அழித்து விட்டதாக கூறி அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த சென்ற போது கொல்கத்தா போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இவ்விவகாரம் பெரிதாகி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 3 நாள் தர்ணா போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.