தேசிய கட்சிகளின் களத்தில் தில்லாக இறங்கிய அதிமுகவின் பரிதாப நிலை..இந்தியாவின் கடைகோடி புள்ளி ஹிஸ்டரி
தேசிய கட்சிகளின் களத்தில் தில்லாக
இறங்கிய அதிமுகவின் பரிதாப நிலை
இந்தியாவின் கடைகோடி புள்ளியின் ஹிஸ்டரி
தமிழகத்தின் கடைக்கோடி மக்களவை தொகுதியான கன்னியாகுமரி தொகுதி, அதிக கல்வியறிவு கொண்ட மாவட்டமாக திகழ்கிறது.
இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி தொகுதியின் கீழ் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.
தற்போது கன்னியாகுமரியாக அறியப்படும் இத்தொகுதி 1951 முதல் 2004 வரையில் நாகர்கோவில் தொகுதியாகவே தேர்தல்களை எதிர்கொண்டது.
அந்த வகையில், 2004 தேர்தல் முடிவுகளை அலசி பார்த்தோமானால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான பெல்லார்மின் 4 லட்சத்து 10 ஆயிரத்து 91 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பாஜக வேட்பாளரான பொன் ராதாகிருஷ்ணன் 2 லட்சத்து 45 ஆயிரத்து 797 வாக்குகள் பெற்று 1 லட்சத்து 65 ஆயிரத்து 294 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
பின்னர் நாகர்கோவில் தொகுதி, மறுசீரமைக்கப்பட்டு கன்னியாகுமரி தொகுதியாக பெயர் மாற்றம் பெற்று தேர்தல் நடந்தன. இதன் பின்னர் 2009ம் ஆண்டு தேர்தலின் போது,
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் 3 லட்சத்து 20 ஆயிரத்து 161 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் 2 லட்சத்து 54 ஆயிரத்து 474 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
அதே வேளையில் 2004ல் வெற்றி கண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பெல்லார்மின் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்ட நிலையில், 85 ஆயிரத்து 583 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
இதன் பின் 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, பாஜகவை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 72 ஆயிரத்து 906 வாக்குகளை பெற்று வெற்றி கண்ட நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் 2 லட்சத்து 44 ஆயிரத்து 244 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
மேலும் இத்தேர்தலின் போது தனித்து போட்டியிட்டு மிரள வைத்த அதிமுக, கன்னியாகுமரி தொகுதியில் மண்ணை கவ்வியது. அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜான் தங்கம் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 239 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
2019ம் ஆண்டு தேர்தலின் போது, திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 6 லட்சத்த்து 27 ஆயிரத்து 235 வாக்குகள் பெற்று வெற்றிக்கண்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக வேட்பாளரான பொன் ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 67 ஆயிரத்து 302 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் மறைந்த எம்.பியின் மகன் விஜய் வசந்த் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு 5 லட்சத்து 76 ஆயிரத்து 37 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். பாஜக சார்பில் போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் 4 லட்சத்து 38 ஆயிரத்து 87 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
இந்தியாவின் கடைக்கோடி எல்லையாக உள்ள கன்னியாகுமரி, தேசிய கட்சிகளின் கோட்டையாக திகழ்வது இந்த தரவுகள் மூலம் தெளிவாகியுள்ளது..