தேதி சொன்னதும் மோடியின் நவீன செயல்.. "புதிய திட்டம், நிதி உதவி, அடிக்கல் நாட்ட தடை"
நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆவலுடன் எதிர்பார்த்த தேர்தல் அட்டவணை வந்துவிட்டதாகவும், மிகப்பெரிய ஜனநாயக திருவிழா தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 140 கோடி கொண்ட இந்தியா, வளர்ச்சியில் புதிய சாதனைகளை படைத்து வருவதாகவும், ஐந்தாவது பொருளாதார நாடாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், பாஜக அரசின் திட்டங்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சென்றடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். தமது மூன்றாவது பதவிக்காலத்தில், உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு உழைக்கப்போவதாகவும் தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை மக்கள் பாஜகவுக்கு அளிப்பார்கள் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.