திமுக லிஸ்ட்... எம்.பி ஆகிறாரா வடிவேலு..? - ஒரே வார்த்தையில் ஓப்பனாக சொன்ன பதில்
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வடிவேலு, அதன் பிறகு பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். 2021-இல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்த பிறகு அவருடன் நெருக்கமாகி, தற்போது திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், மெரீனாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தை பார்வையிட்ட வடிவேலு, அதைத் தொடர்ந்து, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முதல்வரின் பிறந்தநாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக வடிவேலு போட்டியிட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இதுகுறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தாம் சென்னையில் தங்கியிருந்து திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாக கூறினார். கலைஞர் நினைவிடத்தை பார்வையிட்டதாலும், திமுக பொதுக்கூட்ட மேடையில் பேசியதாலும் தன்னை தொடர்பு படுத்தி பேசுகிறார்கள் என்றும், அப்படி எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.