அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தே.மு.தி.க. உடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் குழுவினர், கடந்த 1-ம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அ.தி.மு.க தரப்பில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி, விருதுநகர் உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், கடலூர், திருச்சியை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்குவது தொடர்பாக அ.தி.மு.க தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. சுதீஷ் உடல்நலத்தை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவு செய்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதியை தே.மு.தி.க கைவிட்டுவிட்டு, அதற்கு மாறாக திருச்சியை கேட்பதாக தகவல் வெளியானது. மாநிலங்களவை பதவியை தற்போதைய சூழலில் வழங்க முடியாது எனவும், இதுதொடர்பாக தேர்தலுக்கு பிறகு பேசிக் கொள்ளலாம் எனவும் அ.தி.மு.க தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அ.தி.மு.க குழுவினர் இன்று தே.மு.தி.க.வுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.