#elections2024 | #electionswiththanthitv
இன்று தொடங்குகிறது ஜனநாயக திருவிழா - காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு
உலகின் மிப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல், இன்று தொடங்கி, ஜூன் 1-ஆம் தேதி வரை, 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டமாக, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்காக நாடு முழுவதும் 1.87 லட்சம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 16.63 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 அணிகளாக அரசியல் கட்சிகள் தேர்தலில் இறங்கியுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தம் 6 கோடியே 23 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.