நாடாளுமன்ற மக்களவை தேர்தலை வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இதற்கான முன்னேற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. எனவே வருகிற 13ஆம் தேதிக்குப் பிறகு மக்களவை பொதுத் தேர்தல் குறித்த அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட சில மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி, அந்த ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.