தீக்குண்டம் எதிரே எழுந்தருளிய அம்மன்... சிலிர்த்து போய் தீயில் இறங்கிய பக்தர்கள்
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற திருவிழாக்கள் களைகட்டின.
மதுரை
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவ விழா தொடங்கிய நிலையில், புதுமண்டபத்தில் சுந்தேரசுவரர், மீனாட்சியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது இசைக்கலைஞர்களின் வீணை வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம்
கும்பகோணம் சமய நாகமுத்து காளியம்மன் கோயிலில்,
திருநடன உற்சவத்தின் 3ஆம் நாள் நிகழ்வாக, பச்சைகாளியம்மன், பவளகாளியம்மன் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. 50 நாதஸ்வர தவில் கலைஞர்களின் இன்னிசை முழங்க, இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மணப்பாறை
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் வேடபரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன், சிறப்பு வழிபாடுகளுக்கு பின் குதிரை வாகனத்தில் வைக்கப்பட்டதும் வேடபரி நிகழ்ச்சி தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்
வேதாரண்யம் அடுத்த ஞாயிறுசந்தைதோப்பு, திரவுபதி அம்மன் ஆலயத்தில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன், தீக்குண்டம் எதிரே எழுந்தருள, விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.