இமைக்கும் நொடியில் வெடித்து சிதறிய 6 பேர் - 2025-ன் முதல் வாரமே தமிழகத்தை உலுக்கிய கோரம்

Update: 2025-01-05 03:53 GMT

இமைக்கும் நொடியில் வெடித்து சிதறிய 6 பேர் - 2025-ன் முதல் வாரமே தமிழகத்தை உலுக்கிய கோரம் - கனவிலும் நினைத்து பாரா பயங்கரம்

2025 புத்தாண்டின் முதல் வாரத்திலேயே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் மனதை ரணமாக்கி உள்ளது. இதுகுறித்து பார்க்கலாம்..விரிவாக..

விருதுநகர் மாவட்டம், பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான சாய்நாத் பட்டாசு ஆலையில் தான், இந்த கோர சம்பவம் அரங்கேறி உள்ளது. 6 பேரின் உயிரைக் காவு வாங்கிய இந்த விபத்தைத் தொடர்ந்து, உரிமையாளரின் பெயரில், பட்டாசு ஆலையை மற்றொருவர் இயக்கி வந்தது தெரியவந்திருக்கிறது.

நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் சனிக்கிழமை காலை வழக்கம்போல, தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனிடையே, பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன கலவையை தயார் செய்தபோது வேதியியல் மாற்றம் மற்றும் உராய்வு காரணமாக பயங்கரமாக சத்தத்துடன் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில், அரங்கேறிய இந்த கோர விபத்தில் அங்கு இருந்த ஒரு அறை முற்றிலுமாக தரைமட்டமானது. இதில், வேல்முருகன், நாகராஜ், கண்ணன், காமராஜ், சிவகுமார், மீனாட்சிசுந்தரம் ஆகிய 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனிடையே, ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதீன் என்பவர் 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர், சிவகாசி, விருதுநகர் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல, வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் நேரில் ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் பேரின் மீது 5 பிரிவுகளின் கீழ் வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டாசு ஆலைகள், கிடங்குகளிலும் வெடி விபத்து ஏற்படுவது தொடர் கதையான நிலையில், இவ்வாறான வெடி விபத்துகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்