ரயிலில் திடீரென மயங்கிய கர்ப்பிணி... கணவன் சொன்ன வார்த்தை.. கடைசியில் நடந்த அதிசயம்
திருவாரூரைப் பூர்வீகமாகக் கொண்ட சியாமளா தேவி, சென்னையில் தன் கணவருடன் வசித்து வந்த நிலையில், பிரசவத்திற்காக தாயார் வீட்டிற்கு செல்ல ரயிலில் கிளம்பியுள்ளார். திடீரென ரயிலில் அவருக்கு வலிப்பு வந்து மயங்கியுள்ளார். பயணிகளின் ஒத்துழைப்பால் டிடிஆர், 108 ஆம்புலன்சைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலூர் திருப்பாதிரிப் புலியூர் ரயில் நிலையத்தில் அவசரமாக ரயிலை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ரயில் நடைமேடையை விட்டு சற்று தள்ளி நின்ற நிலையில், 108 ஆம்புலன்ஸ் குழுவினர் தண்டவாளத்தில் இறங்கி பாதுகாப்பாக கர்ப்பிணி சியாமளாவை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது. தனியார் மருத்துவமனைகளே செய்யத் தயங்கும் அறுவை சிகிச்சையை செய்து அசத்தினர் அரசு மருத்துவர்கள். தகவலறிந்து வந்த ஆட்சியர் அருண் தம்புராஜ் தாய் - சேய் நலன் விசாரித்ததுடன், மருத்துவர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டி தெரிவித்தார். முதல்வரின் பிறந்த நாளான இன்று திருவாரூருக்கும் கடலூருக்கும் தொப்புள் கொடி பந்தமாக இந்த நிகழ்வு அமைந்த நிலையில், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் சார்பில் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.