தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில், சாலைப்பள்ளத்தில் தேங்கியுள்ள நீரில் சமூக ஆர்வலர் துணிதுவைத்து எதிர்ப்பை தெரிவித்தார். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவதால், அப்பகுதி சாலையில் ஆங்காங்கே குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனை கண்டித்து நூருதில் அமீர் என்ற சமூக ஆர்வலர், பள்ளத்தில் தேங்கி கிடந்த தண்ணீரில் சோப்பு போட்டு துணி துவைத்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.