பெற்ற தாய்க்கு கோவில் கட்டி ஊரையே கூட்டி கும்பாபிஷேகம் நடத்திய பாசக்கார மகன்கள்
பெற்ற தாய்க்கு கோவில் கட்டி ஊரையே கூட்டி கும்பாபிஷேகம் நடத்திய பாசக்கார மகன்கள்
580 கிலோ ஐம்பொன்னில் தத்ரூபமாக காட்சி தந்த தாய்
கருவில் சுமந்த தாய்க்கு, 1 கோடி ரூபாய் செலவில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த மகனின் நெகிழ்ச்சி செயலை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
10 மாதம் கருவில் சுமந்து...பாலூட்டி சீராட்டி வளர்க்கும் தாயை, தள்ளாடும் வயதில் கண்ணில் வைத்து பார்த்துக் கொள்ள வேண்டிய பிள்ளைகள்..ஆதரவின்றி நடுத்தெருவில் விட்டு செல்லும் அவலச்சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் சூழலில்...
பெற்ற தாய்க்கு கோவில் கட்டி மகிழ்ந்த மகன்களில் நெகிழ்ச்சி செயல் அரங்கேறியுள்ளது...
சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் அருகே உள்ள வெளியாரி கிராமத்தை சேர்ந்த கருப்பையா, முத்துக்காளி அம்மாள் தம்பதிக்கு சண்முகநாதன், சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த முகன் சண்முகநாதன் புதுக்கோட்டையில் சூடம் தயாரிக்கும் கம்பெனியும், 2வது மகன் சரவணன் மற்றும் 3வது மகன் சந்தோஷ் குமார் சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றனர்.
மூவரையும், தாய் முத்துக்காளி அம்மாள் கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த 2021ம் ஆண்டு 63 வது வயதில் அவர் உயிரிழக்க, மகன்கள் தாளாத துயரத்தில் தள்ளப்பட்டனர்.
தங்களுக்காகவே வாழ்ந்து மறைந்த தாயின் நினைவாக ஏதாவது செய்ய நினைத்த மகன்கள், தங்கள் அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர்.
இதற்காக கட்டடக்கலை நிபுணர்களிடம் ஆலோசித்து சுமார் 1 கோடி ரூபாய் செலவில் தங்கள் ஊரிலேயே கோவில் கட்டினர்.
சுமார் 580 கிலோ எடையில், 5 அடி உயரத்திற்கு தாயின் சிலையை ஐம்பொன்னால் வடிவமைத்து பிரதிஷ்டை செய்தனர்...
இக்கோவில் கும்பாபிஷேக விழாவில், யாக சாலைகள் அமைக்கப்பட்டு நான்கு கால பூஜைகளுடன் யாக வேள்வி நடத்தி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தினர்..
பின்னர், யாகசாலையில் இருந்து கலசங்கள் கோபுரத்திற்கு கொண்டு சென்று புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் உறவினர்கள் கிராம மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்
மகன்களின் இந்த செயல் சிவகங்கை மக்களை மட்டுமல்ல...ஒட்டுமொத்த தமிழக மக்களையும் நெகிழச் செய்துள்ளது..