பல்லடம் மூவர் கொலையில் சென்னிமலை கும்பலுக்குத் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்து இருக்கிறது
Vovt
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள் மகன் செந்தில் குமார் ஆகியோர் கடந்த மாதம் 28 ம் தேதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் தனியாக இருந்த தம்பதிகள் கொலையான சம்பவத்தில் கைதான கொலையாளிகள் இந்த கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். சென்னிமலை கும்பல் கொலை செய்துவிட்டு அவர்களின் உயிர் பிரிந்த பிறகே சம்பவ இடத்தை விட்டு செல்வார்கள் என்பதும், அதே போலக் கொலை நடந்த இடத்தில் எந்த விதமான தடையங்களும் சிக்கி விடக்கூடாது என்பதற்காக மிளகாய்ப் பொடிகளைத் தூவி செல்வது தான் அவர்களது பாணி என்பதும் விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. மேலும் சென்னிமலை கும்பல் சிகரெட் பயன்படுத்துவது கிடையாது என்பதால் பல்லடம் கொலையில் சென்னிமலை கும்பலுக்குத் தொடர்பில்லை எனத் தெரிய வந்துள்ளது. பல்லடம் கொலை நடந்த இடத்திலிருந்து சிகரெட் துண்டுகள் எடுக்கப்பட்டதும், செந்தில்குமாரின் செல்போன் திருடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.கொலை நடந்து பத்து நாட்களாகியும் கொலையாளிகள் குறித்து எந்த விதமான தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.