வளைத்து வளைத்து லஞ்சம் வாங்கிய நகராட்சி ஆணையர்..! பொறிவைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை | Ooty
நீலகிரி மாவட்டத்தில் 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன் கடந்த 9-ந்தேதி இரவு பிடிபட்ட உதகை நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உதகை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஜஹாங்கீர் பாஷா, அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார் வந்தன. குறிப்பாக உதகையில் கட்டப்பட்டுள்ள பிரபல துணி கடை மற்றும் நகை கடையை அதிக பரப்பளவில் கட்டவும், துணிக்கடைகளை உணவகங்களாக மாற்றவும் அவர் லஞ்சமாக பணம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த சில வாரங்களாக அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில், தொட்டபெட்டா சந்திப்பு அருகே 11 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன் கடந்த 9-ஆம் தேதி இரவு பிடிபட்டார். அவரிடமும், அவருக்கு பணம் கொடுத்த 5 பேரிடமும் விசாரணை நடத்திய பிறகு,
அவர் மீது வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜஹாங்கீர் பாஷாவை தற்போது காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே உதகை நகராட்சி ஆணையர் பொறுப்பானது, உதகை நகராட்சி தலைமை பொறியாளரிடம் அளிக்கப்பட்டுள்ளது.